இணையவழி பணப்பரிமாற்றம் மூலம் போதைப்பொருள் கடத்தல் – நீர்கொழும்பில் இருவர் கைது!


இணையவழி பணப்பரிமாற்ற முறைகளை பயன்படுத்தி வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 01 கிலோகிராம் 34 கிராம் ஹஷிஷ், 07 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 08 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபா பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு கார்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.