நாடு முழுவதும் 23,000 தாதியர் பற்றாக்குறை – கடும் மன அழுத்தத்தில் தாதியர்கள்!
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடுமையான மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை எதிர்கொண்டு வருவதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
தாதியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய வைத்தியசாலை கட்டமைப்பில் சுமார் 23,000 தாதியர்களுக்கும், 14,000 கனிஷ்ட ஊழியர்களுக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலைமையால், ஒரு தாதியர் இரு தாதியர்களின் பணிச்சுமையை ஏற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும், சில நேரங்களில் தொடர்ந்து பல நாட்கள் பணியாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிக வேலைப்பளு காரணமாக தாதியர்கள் உடல் மற்றும் மன ரீதியான சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாதியர் பற்றாக்குறையை தீர்க்க குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் உடனடியாக தயாரிக்கப்படாவிட்டால், நாட்டின் வைத்தியசாலை சேவை அமைப்பு மேலும் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
