இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் : வெளியான வர்த்தமானி!
இலங்கையில் இறக்குமதி பரிவர்த்தனைகளுக்கான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மேலும் திறம்பட கண்காணிக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுக்கும் வங்கிகள் மூலம் தனித்துவமான சிறப்பு பரிவர்த்தனை எண் வழங்கப்பட வேண்டும்.
மேலும், அந்த பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் கட்டாயமாக இலங்கைச் சுங்கத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவு விவரங்கள், பயன்படுத்தப்படும் நாணய வகை, கொடுப்பனவு திகதி, தற்காலிக விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் பொருட்களின் முழுமையான விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, இறக்குமதி முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த இறக்குமதியாளர்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு இல்லாதவர்களுக்கு வர்த்தக வங்கிகள் ஊடாக முன்கொடுப்பனவுகள் செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய உத்தரவுகள் மூலம், இறக்குமதி துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும், நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளை முறையாகக் கண்காணிப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.
