யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவித்திருந்த தனது பதாகையை கிழித்து தனது காரில் எடுத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி!


யாழ்ப்பாணத்தில் அவமதிப்பான வாசகங்கள் இடம்பெற்றிருந்த பதாகை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அகற்றி, அதனை தனது காரில் எடுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சின்னக்கடை பகுதிக்கு அண்மையில், சுமார் 10 அடி உயரமுடைய இந்த பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஈனப் பிறவி’ என எழுதப்பட்டிருந்ததுடன், அவரது புகைப்படத்தின் மீது செருப்புகளால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதாகை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், குறித்த பதாகையை அகற்றி தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அவர் நடத்தை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.