பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!


பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் பாடசாலை அதிபர்களின் முழுமையான பொறுப்பாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ வலியுறுத்தியுள்ளார்.

அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தை மூடிமறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் அதிபர் மற்றும் உப அதிபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் அதிபர்களின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் மாணவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகாத பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து பாடசாலைகளிலும் “பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள்” கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.