தெல்தெனியவில் காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: பிரதான சந்தேக நபரான காதலன் மனைவியோடு யாழில் கைது!
தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான காதலன், அவரது மனைவி மற்றும் குழந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று (24) அதிகாலை யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்து அடையாளத்தை மறைத்திருந்ததுடன், அவரது மனைவி பர்தா அணிந்து வேடமிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் தலைமறைவாக தங்கியிருந்ததுடன், அங்கிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று தனது மற்றைய இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பின்னர் பொலிஸாரிடம் சரணடைய திட்டமிட்டிருந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், அவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற உடற்பயிற்சி நிபுணர் என அடையாளம் காணப்பட்டார்.
மேலும், சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர் பெண்ணை சுயநினைவற்ற நிலையில் காரில் ஏற்றிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
