பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்தி பண மோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!


பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்தி, வீடுகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ஏமாற்றி பணம் வசூலிக்கும் குழுவொன்று செயல்பட்டு வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்புப் பரிசோதனை நடவடிக்கைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சட்டபூர்வ நடவடிக்கைகள் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் கோரப்படுவதாக சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்ளும் போது எந்தக் காரணத்திற்காகவும் கட்டணம் வசூலிப்பதோ அல்லது பணம் பெற்றுக்கொள்வதோ இல்லை என வலியுறுத்தினார்.

எனவே, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எனத் தங்களை அறிமுகப்படுத்தி எவரேனும் பணம் கோரினால், அவர்களுக்கு பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக பொலிஸாருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.