இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல் – சுகாதார தரப்பின் எச்சரிக்கை!
இலங்கையில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், டெங்கு நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறையவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை தொடர்ந்து சுத்தமாகவும் நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படாத வகையிலும் பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் கடந்த 25 நாட்களுக்குள், 85,712 இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 7,188 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் சூழலை ஏற்படுத்திய 6,000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 53,159 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், தண்ணீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்றுவதன் மூலம் டெங்கு பரவலைத் தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
