வருடாந்த பேருந்து கட்டண திருத்தம்: நாளை முதல் அமல்படுத்த கோரிக்கை!
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை நாளை (01) முதல் அமுல்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வருடாந்த கட்டண திருத்தக் கொள்கைக்கு அமைவாக, இம்முறை பேருந்து கட்டணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரம் குறித்து இதுவரை பேருந்து சங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என பேருந்து சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், இம்முறை எதிர்பார்க்கப்படும் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் புதிய பேருந்து கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
