தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ சந்திப்பு!


தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதுவர் யோஹெய் சசகாவா மற்றும் இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் தலைமையிலான குழுவினர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவை நேற்று (11) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, இலங்கை அரசாங்கம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சசகாவா சுகாதார அறக்கட்டளை ஆகியவற்றுக்கிடையிலான வலுவான ஒத்துழைப்பு பாராட்டப்பட்டதுடன், தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

அரசியல் அர்ப்பணிப்பை அதிகரித்தல், சமூக பங்களிப்பை மேம்படுத்தல் மற்றும் முதன்மை சுகாதார சேவைகள் ஊடாக மக்கள் மையப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குதல் ஆகியவற்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தொழுநோய் ஒழிப்பு இலக்குகளை அடைவதற்காக தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல், புதிய கூட்டாண்மைகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவை இலங்கைக்கு வழங்க உலக சுகாதார அமைப்பும் சசகாவா சுகாதார அறக்கட்டளையும் உறுதியளித்துள்ளன.