நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு மட்ட எச்சரிக்கை விடுப்பு!
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (12) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (13) முற்பகல் 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளிலும் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
