பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்யக் கோரி நாடாளுமன்றில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ள இந்தப் பிரேரணை இதுவரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட PTA சட்டம் தன்னிச்சையான கைதுகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்டத்தை திருத்தம் செய்வதோ அல்லது புதிய பெயரில் மாற்றுவதோ தீர்வாகாது எனத் தெரிவித்துள்ள அவர், நல்லிணக்கத்தையும் ஜனநாயக ஆட்சியையும் வலுப்படுத்தும் வகையில் PTA சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
