கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இலங்கை மீனவர் – இந்தியாவில் சடலமாக மீட்பு!


நெடுந்தீவு கடற்பகுதியில் கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரின் சடலம் இந்தியாவின் நாகப்பட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (19) கரையொதுங்கிய குறித்த சடலம், அவர் அணிந்திருந்த ஆடைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கிடைத்த தகவல்களின்படி, நெடுந்தீவு திருலிங்கபுரத்தை நிரந்தர முகவரியாகவும், நெடுந்தீவு தாளைத்துறையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட 41 வயதுடைய ஜேசுதாசன் ஆரோக்கிய அன்ரனீஸ் (சதீஸ்) என்பவர் கடந்த 11.06.2026 அன்று கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது சடலம் தமிழகத்தின் நாகப்பட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.