அமெரிக்கா மற்றும் ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் : இலங்கை வரவேற்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இந்த ஒப்பந்தம் பிராந்திய மற்றும் உலகளாவிய பதற்றங்களை குறைக்கும் முக்கியமான முன்னேற்றமாக அமையும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தேவையான கட்டமைப்பை உருவாக்குவதற்குமான நடவடிக்கைகள், நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கருத்து வேறுபாடுகளுக்கு இராஜதந்திர வழிமுறைகள் மூலம் அமைதியான தீர்வுகளை காண்பதை இலங்கை தொடர்ந்து ஆதரிப்பதாகவும், இந்த முயற்சி முழுப் பிராந்தியத்திலும் நிலையான அமைதியை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த இராஜதந்திர முடிவை எட்டுவதில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு, கட்டார் அரசு மற்றும் இதற்காக ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தனது நன்றியை தெரிவித்துள்ளது.
