குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு கூச்சலிட்ட தாய் கைது!
தனது இரண்டரை மாதப் பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய – கஹதுவ, துடுவேகொட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தாய், குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர் “நான் மகளை கிணற்றில் போட்டுவிட்டேன்” என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
அந்த சத்தத்தைக் கேட்ட கணவர் உடனடியாக கிணற்றுக்குச் சென்று பார்த்த போது, குழந்தை நீரில் மிதந்த நிலையில் இருந்ததாகவும், அவர் உடனே குழந்தையை மீட்டு அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கிணறு ஆழமற்றதாக இருந்ததும் குழந்தை உயிர் பிழைக்க முக்கிய காரணமாக அமைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
