பொசன் பெரஹராவில் துயரம் – ஆத்திரமடைந்த யானை தாக்கி இருவர் உயிரிழப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற 78ஆவது பொசன் பெரஹரா நிகழ்வின் போது, கொண்டு வரப்பட்ட யானையொன்று தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்றிரவு (21) நடைபெற்ற பெரஹராவில் பங்கேற்பதற்காக இரண்டு யானைகள் விகாரைக்கு அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை, யானை பாகனின் உதவியாளர் யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அதனை இறக்குவானை ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் திடீரென ஆத்திரமடைந்த யானை, உதவியாளரைத் தாக்கி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உதவியாளரின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு சென்ற யானை பாகனையும் அதே யானை தாக்கியதில், அவரும் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்திற்குப் பின்னர், யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல் பகுதிக்குத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
யானையை மயக்க மருந்து வழங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் பெரஹராவில் கலந்துகொண்ட பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
