முறைகேடான கொள்முதல் குற்றச்சாட்டு – லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது!


லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளராக பணியாற்றி வந்த ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்னவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.

முறையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட மீள் கொள்வனவு நடவடிக்கையின் மூலம், ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் உறைகள் பெறப்பட்டதாகவும், அதன் காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 14.3 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடான கொள்முதல் நடவடிக்கையால் பிரதான விநியோகஸ்தர் நிறுவனத்திற்கு அநியாயமான முறையில் அதிகளவு இலாபம் கிடைக்க வழிவகுத்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக பொது முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.