மாது ஆற்றில் முதலை தாக்குதல் – படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!


மாது ஆறு பகுதியில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியதில், படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று (25) காலை இடம்பெற்றுள்ளது.

அம்பலாங்கொடை – வத்துகெதர பகுதியைச் சேர்ந்த இருவர் மாது ஆற்றில் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென தோன்றிய முதலை அவர்கள் பயணித்த படகை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக படகு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது நீரில் மூழ்கிய ஒருவரை மீட்க முடியாமல் போன நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வத்துகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.