போலி கடவுச்சீட்டு தயாரித்து குற்றவாளி ஒருவரை நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய சந்தேகத்தில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக, வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு தயாரித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் என்றும், தற்போது ஜனாதிபதி செயலகம், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைப் பிரிவில் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பணியாற்றி வருவதுடன், கண்டியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் முன்னதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவில் பிரதிக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய காலத்திலேயே இந்தக் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றவியல், போக்குவரத்து, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு விசாரணை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
