சிறுமி துஷ்பிரயோகம்; சமூக அழுத்தங்களால் மனமுடைந்திருந்த தந்தை உயிர்மாய்ப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமி துஷ்பிரயோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் விசாரணைகளின் படி, 12 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுமிகள் தொடர்பாக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக 54 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபர் குறித்த குடும்பத்தினருடன் பழக்கம் கொண்டிருந்ததாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் 12 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருந்த மற்றொரு 10 வயது சிறுமியையும் துன்புறுத்த முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் பின்னர் பாடசாலை ஆசிரியரிடம் தெரியவந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தனது மகளுக்கு ஏற்பட்ட சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அழுத்தங்களாலும் மனமுடைந்திருந்த 12 வயது சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
