யுத்தத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை - இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவிப்பு!
அமெரிக்க–ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதையதும் எதிர்காலத்திலும் வரும் அழுத்தங்களைக் கவனத்தில் எடுத்தாலும், லெபனானில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளை (IDF) திரும்பப் பெறுவதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவிப்பதாக கட்ஸ் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், லெபனான் அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நிலைப்பாட்டை நேரடியாக ட்ரம்பிடம் தெரிவித்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துடன் தொலைபேசியில் பேசும்போதும் இதையே மீண்டும் வலியுறுத்தியதாகவும் கட்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் உயர்ந்த பாதுகாப்பு நலன்களிலும் குடிமக்களின் பாதுகாப்பிலும் எந்தவித சமரசமும் செய்யப்படமாட்டாது என்றும், பாதுகாப்பு மண்டலங்களில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், லெபனானில் நடக்கும் நிகழ்வுகளில் ஈரான் தலையிட்டு இஸ்ரேலைத் தாக்கினால், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும், அதிகார சமநிலையை தெளிவாக வெளிப்படுத்துவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
