தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்!


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள். 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.

புட்டண்ணா கனகலிடம் ‘இருளும் ஒளியும்’ படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘தலைபிரசவம்’ படத்தில் உதவி இயக்குராக பணிபுரிந்தார். அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியான ’16 வயதினிலே’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலில் சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை அவர் பெற்றார்.

டிக்டிக்டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்களையும், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய இந்திப் படங்கள் என சுமார் 44 படங்களை இயக்கியுள்ளார்.

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், டிக்டிக்டிக், என்னுயிர் தோழன், கடல் பூக்கள், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்கள், கொத்த ஜீவித்தலு தெலுங்கு படம், சொல்வ சவான், ரெட் ரோஸ் ஆகிய இந்திப் படங்கள் என 12 படங்களுக்கு கதை எழுதியவர், கே.பாக்யராஜ், மணிவண்ணன், கலைமணி, ‘அன்னக்கிளி’ செல்வராஜ், பஞ்சு அருணாசலம், வேதம் புதிது கண்ணன் ஆகியோரின் கதைகளிலும் படம் இயக்கி இருக்கிறார்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், இதயம், தந்துவிட்டேன் என்னை, காதல் வைரஸ், ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படை வீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் ஆகிய இருபது படங்களில் நடித்திருக்கிறார்.

கே.பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, அருணா, விஜயசாந்தி, உஷா, கவுண்டமணி, கார்த்திக், ராதா, தியாகராஜன், ரேவதி உள்ளிட்ட பலரை திரையுலகில் அறிமுகம் செய்தவர், மகன் மனோஜ் கே.பாரதியை ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர், ‘அல்லி அர்ஜுனா’ படத்தையும் மகனுக்காக தயாரித்தார்.

இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார்.

பாரதிராஜா தனது சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பாரதிராஜா – சந்திர லீலா தம்பதிக்கு மனோஜ் என்கிற மகனும், ஜனனி என்கிற மகளும் பிறந்தனர். மலேசியாவை சேர்ந்த ராஜகுமார் தம்பிராஜாவுக்கு மகள் ஜனனியை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

மகன் மனோஜ் தாஜ்மகால் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 15க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

இவரது காதல் மனைவி நடிகை நந்தனா. சக்ஸஸ் உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

மத்திய அரசு 2004 -ம் ஆண்டு பாரதிராஜாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. மேலும் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள் உள்ளிட்ட பலவிருதுகளையும் அவர் வென்றுள்ளார்.