10 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்; தந்தை, தாத்தாவை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் பொலிஸார்!


அம்பாந்தோட்டை பகுதியில் 10 வயது சிறுமியிடம் அவரது தந்தையும் தாத்தாவும் முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறி, பொலிஸாரிடம் இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த சிறுமி கடந்த 9ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக காலி பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, தான் எதிர்கொண்டதாகக் கூறப்படும் துயரமான சம்பவங்கள் குறித்து பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பாட்டி, சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது தந்தையும் தாத்தாவும் பல சந்தர்ப்பங்களில் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சம்பவங்கள் குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என இருவரும் தன்னை அச்சுறுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பவத்தில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்படும் தந்தையும் தாத்தாவும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்வதற்காக அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, சிறுவர்களை கைவிடுதல் மற்றும் அவர்களை உடல் மற்றும் உள ரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாதமொன்றுக்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் 2 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.