வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!


இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் (Interpol) ஊடாக சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில், அத்துடன் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலும், இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்கள் மூலம் 38 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொலிஸ்மா அதிபரின் (IGP) நேரடி தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றச் சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் முடக்கம்

இதேவேளை, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் வாகனங்கள், வீடுகள், தங்கம், காணிகள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, 2024ஆம் ஆண்டில் 1.49 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களையும், 2025ஆம் ஆண்டில் 1.549 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் இதுவரை, சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 839 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்பிற்குள் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.