டீசல் விலை குறைந்தாலும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு!


டீசல் விலை குறைக்கப்பட்டாலும், எதிர்வரும் 6 மாத காலத்திற்கு பஸ் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி தொடர்பில் தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

எரிபொருள் விலை சூத்திரம் மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்படுவதால், அதன் அடிப்படையிலேயே பஸ் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜூலை மாதத்தில் பஸ் கட்டணம் திருத்தப்பட்ட பின்னர் அல்லது அதற்கு முன்பாக டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டாலும், அடுத்த 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஜூன் 1 ஆம் திகதி முதல் மாத இறுதி வரையான காலப்பகுதியில் தனியார் பஸ் போக்குவரத்துத் துறைக்கு நாளொன்றுக்கு 25 ரூபாய் வீதம் மொத்தமாக 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், டீசல் விலை குறைந்தால் பஸ் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இடம்பெறவில்லை என்றும், இதுவரை புரிந்துணர்வு அடிப்படையிலேயே கட்டண மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இனிமேல் அந்த நடைமுறை தொடராது. இது தொடர்பில் எமக்கு எதிராக யாரேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.