அடுத்த 30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட வேண்டும்!
முன்னாள் வடமாகாண ஆளுநரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளருமான சுரேன் ராகவன், மாகாண சபைத் தேர்தலை அடுத்த 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமைகள் தற்போதைய சூழலில் பறிக்கப்பட்டு வருதாகக் கவலை வெளியிட்ட அவர், தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டியுள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மாகாண சபைத் தேர்தலுக்கான கால அட்டவணையை உடனடியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அதே நேரத்தில், அரசியல் அழுத்தங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்பாக அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் அழுத்தம் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் புலம்பெயர் தமிழர்கள் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்பட வேண்டும்; இல்லையெனில் அவற்றை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
