நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!


இன்றைய தினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், அதேபோல் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடற்பரப்பு நிலைமை தொடர்பாக, சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக மணித்தியாலத்துக்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று காணப்படலாம்.

அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், முல்லைத்தீவு முதல் காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்துக்கு 50–60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

⚠️ எனவே, மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.