தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மூதூர் வர்த்தகர்களுக்கு 2.17 கோடி ரூபாய் நிதியுதவி!
தித்வா புயல் அனர்த்தத்தினால் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தங்களது தொழில்களை ஆரம்பிப்பதற்கான நிதியுதவிகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 381 பயனாளிகளுக்கு மொத்தமாக 2 கோடியே 17 இலட்சம் ரூபாய் (21,700,000 ரூபாய்) காசோலைகளாக வழங்கப்பட்டது.
மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிரனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான முகமது சப்ரான் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
தித்வா புயல் காரணமாக மூதூர் பகுதியில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன், தித்வா புயல் காலத்தில் அனைவரும் இணைந்து செயல்பட்டதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழப்புகளை தவிர்க்க முடிந்ததாக தெரிவித்தார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வீடுகள், கடை உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இயன்ற உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை மீள முன்னேற்றுவதே முக்கிய இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.
