எரிபொருள் மானியம் இம்மாதத்துடன் நிறைவு!
2026 ஜூன் மாதத்துடன் எரிபொருள் மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி நிறைவடைவதாக CPC தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் ஆஜரானபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் ஏப்ரல் மாதம் முதல் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 20 ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.3 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், மொத்த மானியத் தொகை சுமார் 20 பில்லியன் ரூபாயாகும்.
தற்போதைய நிலவரப்படி, ஜூன் மாத இறுதியில் இந்த மானிய நிதி தீர்ந்துவிடும் என்றும், ஜூன் மாதத்திற்குப் பிறகு மானியத்தைத் தொடர்ந்து வழங்குவது குறித்து இதுவரை அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 100 ரூபாய் மானியம் வழங்கியிருந்த போதிலும், ஏப்ரல் மாத தரவுகளின்படி ஒரு லீட்டர் டீசலால் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் மொத்த நஷ்டம் 129 ரூபாயாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க மானியத்திற்குப் பின்னரும் ஒரு லீட்டர் டீசலுக்கு 29 ரூபாய் நஷ்டத்தை கூட்டுத்தாபனம் எதிர்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்தையில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரங்களில், மத்திய வங்கியின் தலையீட்டுடன் டொலரின் பெறுமதியை 350 ரூபாய்க்கு மிகாமல் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் பெரிய அளவில் வெளிநாட்டு நாணயத்தை சந்தையிலிருந்து பெற முயற்சிப்பது மாற்று விகித உயர்வுக்கு காரணமாக இருப்பதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலரின் விலை உயர்வதால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரித்து, அதன் தாக்கம் பொதுமக்களுக்கு ஏற்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர், தற்போதைய திட்டத்தின் கீழ் வங்கிகள் ஊடாக நாளொன்றுக்கு 11 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
