போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 35 கிலோவுக்கும் அதிகமான ‘ஹஷிஷ்’ வகை போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று இரவு (23) சுமார் 10.40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648 மூலம் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின்போது, பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் (35.265 கிலோகிராம்) ஹஷிஷ் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
