இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!


தென்மேற்கு பருவமழையுடன் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை மையமாகக் கொண்டு குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன. மேலும், முப்படைகளின் பங்களிப்புடன் விசேட கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கைகளும் கடுமையாக்கப்படவுள்ளன.

அத்துடன், பிரதேச மட்டத்தில் செயல்படும் ‘பிரஜா சக்தி’ மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுக்களின் ஊடாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றை இலக்காகக் கொண்டு அவசர நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, கொழும்பு மாநகர சபை மற்றும் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.