அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சுமார் 16,000 மாணவர்களுக்கான புதிய தங்குமிட வசதிகள்!
அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சுமார் 16,000 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய விடுதித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
சபரகமுவ மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களில் தலா 7 விடுதிகள் அமைக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் 2,200 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2,000 மாணவர்களுக்காக 6 புதிய விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
அதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களில் முறையே 1,600 மற்றும் 1,800 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
ஸ்ரீ ஜயவர்தனபுர, வவுனியா, வயம்ப, யாழ்ப்பாணம், மொரட்டுவ, ருஹுண மற்றும் கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகங்களுடன் திருகோணமலை வளாகமும் புதிய விடுதி வசதிகளைப் பெறவுள்ளன.
பெரும்பாலான திட்டங்கள் தற்போது விலைமனு கோரல், மதிப்பீடு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளின் கீழ் உள்ள நிலையில், ருஹுண பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில இடங்களில் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
