11 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!


இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கம் முதல் கடந்த 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தம் 1,104,354 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை மட்டும் 82,332 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், இரண்டாம் இடத்தில் ஐக்கிய இராச்சியம் மற்றும் மூன்றாம் இடத்தில் சீனா இடம்பெற்றுள்ளன.

அத்துடன், மாதாந்திர அடிப்படையில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை பெற்ற மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.