வாகனப் பதிவு எண்கள் தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனப் பதிவு எண்களுக்குப் பதிலாக தரமற்ற மற்றும் வண்ணமயமான வாகனப் பதிவு எண்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (DIG) டபிள்யூ. பி. ஜே. சேனதீரா இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் வாகனப் பதிவு எண்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த காரணத்தால் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், அந்த காலப்பகுதியில் வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்களுடன் (A4 தாளிலும் கூட) தற்காலிகமாக வாகனப் பதிவு எண்ணைக் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

எனினும், வாகன எண்களை வெவ்வேறு வண்ணங்களில் அல்லது விருப்பமான வடிவங்களில் தயாரித்து பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தரநிலைகளுக்கு உட்படாமல் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்ட வாகன எண் அட்டைகளை பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.