இலங்கைக்கு தொடர்ந்தும் வலுவான ஆதரவை வழங்குவதாக IMF உறுதி!
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) மீண்டும் உறுதியளித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த IMF தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக், அண்மைக்காலங்களில் இலங்கை இரண்டு பெரிய பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.
அதில் முதன்மையானது “டித்வா” புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் எனவும், அது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய கிழக்குப் போரின் தொடர்ச்சியான தாக்கமும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறான கடினமான சூழ்நிலைகளிலும், இலங்கையின் மக்களும் பொருளாதாரமும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சித் திறனை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டினார்.
IMF ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தற்போது பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அரசாங்க அதிகாரிகளின் வலுவான அர்ப்பணிப்பின் காரணமாக பொருளாதாரச் செயல்பாடுகள் மேம்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கையின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை அங்கீகரிப்பது குறித்து IMF நிர்வாக சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கு ஒப்புதல் கிடைத்தால் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
