அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் - பிரதமரின் அறிவிப்பு!


2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் 2026 செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதன் பின்னர், அனைத்து மாணவர் பதிவுப் பட்டியல்களையும் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பாடநெறிகளை ஆரம்பிக்கும் திகதிகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இம்முறை இரண்டு புதிய பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, ருஹுணு பல்கலைக்கழகத்தில் “புவியியல் தகவல் அமைப்பு” பாடநெறிக்காக 50 மாணவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் “இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு பொறியியல்” பாடநெறிக்காக 50 மாணவர்களும் இணைக்கப்பட உள்ளனர்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மொத்த மாணவர்கள் 281,810 ஆகும்.
அவர்களில் 176,538 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அந்த மாணவர்களில் 42,937 மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாதிருந்தாலும், கல்வி வசதிகளை மேம்படுத்தி தரமான கல்வியை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.