மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாதத்திற்கு 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினருக்கான மின்கட்டணம் 18 சதவீதத்தால் உயர்த்தப்பட உள்ளது.

இதேவேளை, 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திச் செலவு அதிகரித்தமை மற்றும் அடுத்த இரண்டு காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரண உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதால், இந்த கட்டண உயர்வு மொத்த மின் நுகர்வோரில் சுமார் 5 சதவீதத்தினரையே பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்கு இந்த கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.