கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயருக்கு விளக்கமறியல்!
3 மில்லியன் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றதாகக் கூறப்படும் குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் மொஹமட் மொயினுதீன், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (08) பத்தரமுல்லை பகுதியில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குருணாகல் பேருந்து நிலையம் மற்றும் பொது மலசலக்கூடங்களை சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை வழங்குவதற்காகவே இந்த இலஞ்சத் தொகை கோரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை (ACMC) பிரதிநிதித்துவப்படுத்தி குருணாகல் மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் மாநகர சபையில் ஆட்சியமைக்கும் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து பிரதி மேயராக பதவியேற்றிருந்தார்.
