மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்வரும் மே 20 மற்றும் 22ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மே 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் செல்லும் ஜனாதிபதி, பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை மையமாகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள “ரட்டம எகட்ட” தேசிய வேலைத்திட்ட நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
மேலும், மே 22ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, நிந்தவூர் கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைப்பதுடன், அம்பாறை நகரில் அமைக்கப்படவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக்கான கட்டுமானப் பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
விஜயத்தின் இறுதிநிகழ்வாக, அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பிராந்திய அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
