சுற்றுலாத்துறை வருமானத்தில் கடும் வீழ்ச்சி!
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 38.8% வீழ்ச்சியை குறிக்கிறது.
மேலும், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 876,277 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, இந்த நான்கு மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாட்டிற்கு 135,643 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இது, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 896,884 சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2.3% மற்றும் சுற்றுலா வருவாயில் 19.4% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
