வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி 74 வயதுடைய மூதாட்டி பலி!


காலி மாவட்டத்தின் உரகஸ்மான்ஹண்டி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீகாஸ்பிட்டியா பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், நேற்று முன்தினம் (13) மாலை அருகிலுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்றின் காரணமாக மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்ததையடுத்து, மின்கம்பியும் அறுந்து கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருள் சூழ்ந்திருந்ததால் சாலையில் விழுந்திருந்த மின்கம்பியை கவனிக்காத அவர், அதில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மான்ஹண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுதல், மின்கம்பிகள் அறுந்து விழுதல் உள்ளிட்ட அபாயங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பயணங்களின்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.