புனிதமான காவி உடையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலி பிக்குகள் : மகாநாயக்க தேரர்கள் கடும் கண்டனம்!
புத்தர் பெருமானின் புனிதமான காவி உடையை தவறாக பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் போலி பிக்குகள் குழுவினரின் செயலுக்கு மூன்று நிக்காயங்களின் மகாநாயக்க தேரர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்செயல் சாசன விரோதமானதோடு சட்டவிரோதமானதும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், சுமார் 110 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொருட்களுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயணப் பொதியிலும் சுமார் 5 கிலோகிராம் அளவில் போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்ததுடன், அங்கு அவர்கள் சாதாரண உடையில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கைபேசிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.
இச்சம்பவம் கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகும். மேலும், பௌத்த தேரர்கள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாகவும் குறிப்பிடப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
.jfif.jpg)