மின்சாரக் கட்டண திருத்தம்: பொதுமக்களின் வாய்மொழி கருத்துகளை பெறும் நிகழ்வு இன்று!


2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் வாய்மொழி கருத்துகளை பெறும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இந்த பொதுக் கலந்தாய்வு இன்று காலை 08.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

2002 ஆம் ஆண்டின் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் (இலக்கம் 35) பிரிவு 17 மற்றும் 2024 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இலங்கை மின்சாரச் சட்டம் (இலக்கம் 36) பிரிவு 29(10) ஆகியவற்றின் கீழ், இந்த பொதுவிசாரணை சட்டபூர்வமாக முன்னெடுக்கப்படுகிறது.

தேசிய அமைப்பு இயக்குநரால், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்காக (Q2 மற்றும் Q3) இந்த விசேட மின்சாரக் கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் எதிர்ப்புகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துகளை முன்வைக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர்கள், இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.