தமிழக மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் - யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுங்கள் என கூறிய அர்ச்சுனா!
கச்சதீவை மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தமிழக மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், வடக்கு தீவுப் பகுதிகளில் மின்சார விநியோகம் இல்லாமை தொடர்பாக கேள்வி எழுப்பி உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:
“தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, ‘இலங்கைத் தமிழன்’, ‘அடக்கப்பட்ட தமிழன்’ என்ற வகையில் ஒரு தமிழ்க் குரலாக இந்த பாராளுமன்றத்தில் இருந்து என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தின் தீவுப் பகுதிகளில் பாதிக்கு மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அங்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், கச்சதீவை நடிகர் விஜய் கேட்டிருக்கிறார் என்பதற்காக ‘கச்சதீவை வழங்கமாட்டோம்’ என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால், நாங்கள் கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்போது தமிழக மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள்,” என்றார்.
