மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி தப்பியோட்டம்!
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (36) என்பவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நபர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு, நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை கட்டுமானப் பணிகளுக்காக சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மேசன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்பி அவர் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதியை கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
