நாட்டில் இன்றும் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! - இடம்பெயரும் மக்கள்


இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவிலான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இன்று (15) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 8 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 104 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.