விஜய்க்கு கிடைத்த சரித்திர வெற்றி : தவெக கட்சியின் சின்னமான விசிலை ஊதி விஜய் குடும்பத்தினர் கொண்டாட்டம்!


தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை வகித்து வரும் நிலையில், விஜய்யின் குடும்பத்தினர் உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தவெக கட்சியின் சின்னமான விசிலை ஊதி, குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவடைந்த நிலையில், 104 தொகுதிகளில் தவெக முன்னிலையில் இருப்பதாக ஆரம்ப நிலவரங்கள் கூறுகின்றன.

இந்த சூழலில், விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

“தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என் மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கடந்த இரண்டு வருடங்களாக விஜய் தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தார். அந்த அணுகுமுறையை நான் பாராட்டுகிறேன்.

ஒரு தலைவராக, எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற அவரது முடிவு மிகுந்த துணிச்சலை காட்டுகிறது. கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலை எதிர்கொண்டது அவரது தைரியத்தை வெளிப்படுத்துகிறது.

இது விஜய்க்கு கிடைத்த ஒரு வரலாற்று வெற்றி என நான் கருதுகிறேன். விஜயை மக்கள் ஒரு அரசியல் தலைவராக மட்டுமல்ல, தங்களின் ஒருவராகவே பார்க்கின்றனர். இதற்காக தமிழக மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என அவர் கூறியுள்ளார்.