ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஆசிரியை - ஒருநாள் கழித்து சடலமாக மீட்பு!
ஆத்திரத்தில் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் 42 வயதான ஆசிரியையின் சடலம், களுத்துறை தெற்கு கடற்கரையில் ஒருநாள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தாயான அவர், பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவராக தெரியவந்துள்ளது. அவரது கணவரும் ஒரு பாடசாலையில் நடன ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
கிடைத்த தகவல்களின்படி, கடந்த 29ஆம் திகதி, உயிரிழந்த ஆசிரியை தான் முன்னர் பணியாற்றிய பாடசாலையில் தனது தோழிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் அவரது கணவர் வேலை காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, 30ஆம் திகதி அவரது கணவர் கொழும்பில் நடைபெற்ற ஒரு பாடசாலை தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என உயிரிழந்த ஆசிரியை பலமுறை கணவரிடம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் இடையே தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, ஆசிரியை கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், முதலாம் திகதி களுத்துறை தெற்கு கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட அதே ஆசிரியை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் மற்றும் கணவர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மரணத்தின் காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
