நீர் மூலம் பரவும் நோய்கள் : இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
தற்போது நிலவி வரும் மழைக்கால சூழ்நிலை காரணமாக சில பகுதிகளில் ஏற்பட்டிருந்த சிறியளவிலான வெள்ளநீர் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்திற்குப் பின்னர் நீர்நிலைகள் மாசுபடுவதால் டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலத்தின் ஆரம்பத்துடன் பல தொற்றுநோய்களின் அபாயமும் அதிகரிப்பதாகவும், குறிப்பாக டெங்கு காய்ச்சல் தற்போது முக்கிய சுகாதார சவாலாக மாறியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் கூட, விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் காரணமாக எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேற்று நீரில் நடப்பதை தவிர்க்கவும், கொதிக்கவைத்து ஆறவைத்த அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்தவும் சுகாதார அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
