மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை - விவசாய அமைச்சின் அறிவிப்பு!
கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் உள்ளிட்ட முக்கிய பயிர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சேதமடைந்த பயிர்கள் தொடர்பான விபரங்களை அடுத்த 14 நாட்களுக்குள் அருகிலுள்ள விவசாய சேவை நிலையங்களில் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த நிவாரணத் திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து எந்தவித காப்புறுதி கட்டணமும் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், நீர் வற்றிய பின்னரே முழுமையான சேத மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2026 யல பருவ பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலேயே இந்த மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகளின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
